Tuesday, 1 July 2014

காப்பகங்களுக்கான விதிமுறைகளை தளர்த்த மனு

காப்பகங்களுக்கான விதிமுறைகளை தளர்த்த மனு

காப்பகங்களுக்கான விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மனு அளித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில், அர்ஜுன் சம்பத் அளித்த மனு விவரம்:

கோவை மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில், சில காப்பகங்கள் மட்டும் வெளிநாட்டு உதவிகளை பெற்று செயல்பட்டு வருகின்றன. சில காப்பகங்கள் அரசு உதவியால் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள காப்பகங்கள் பொதுமக்கள் உதவியாலும், சொந்த உழைப்பு மற்றும் மூலதனம் மூலம் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

தற்போது காப்பகங்கள் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையால் நல்ல முறையில் செயல்பட்டு வரும் காப்பகங்களை கூட அரசு அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் மூடி வருகின்றனர்.

காப்பகங்களுக்காக சமீபத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மிகவும் கடுமையாக உள்ளன. விதிமுறைகளைத் தளர்த்த வேண்டும். காப்பகங்களை எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி திடீரென மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது. மேலும், காப்பகங்களுக்கான விதிமுறைகளை சரியாக நிறைவேற்ற கால அவகாசம் அளித்து பின்னர் சோதனை நடத்த வேண்டும்.

வங்கதேசத்தவர்களை வெளியேற்ற மனு: கோவை இடையர் வீதி, கருப்ப கவுண்டர் வீதி, சலீவன் வீதி, காந்தி பார்க், கெம்பட்டி காலனி பகுதியில் வங்கதேசத்தைச் சேர்ந்த சிலர், பொய்யான ஆவணங்களைக் காண்பித்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறி வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகின்றனர்.

சட்ட விரோதமாக ஊருடுவியுள்ள சுமார் 15 ஆயிரம் வங்கதேசத்தவர்களை கோவையில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment