Wednesday, 22 October 2014

செம்பட்டி அருகே திப்புசுல்தான் மணிமண்டபம் கட்டுவதை எதிர்த்து கிராம மக்கள் மனு


திண்டுக்கல், 

செம்பட்டி அருகே திப்பு சுல்தான் மணிமண்டபம் கட்டுவதை கைவிட வலியுறுத்தி கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

திப்புசுல்தான் மணிமண்டபம்

இந்திய சுதந்திர போராட்டத்தின்போது ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்ட திப்புசுல்தான், ஹைதர்அலி ஆகியோருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக திண்டுக்கல் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது.

இந்த நிலையில் செம்பட்டி அருகேயுள்ள சீவல்சரகு ஊராட்சி புதுகோடாங்கிபட்டியில் திப்புசுல்தான் மணிமண்டபம் கட்டுவதற்கு நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக கிராமசபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றினர்.

கிராமமக்கள் மனு

இதற்கிடையே நேற்று புதுகோடாங்கிபட்டியை சேர்ந்த கிராமமக்கள் பலர் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதுபற்றி கிராமமக்கள் கூறுகையில், மணிமண்டபம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் நாங்கள் மாரியம்மன், கருப்பணசாமியை வைத்து வழிபட்டு வருகிறோம். எனவே, அந்த இடத்தில் திப்புசுல்தான் மற்றும் ஹைதர்அலிக்கு மணிமண்டபம் கட்டும் முடிவை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும், என்று தெரிவித்தனர்.

சிறைவாசிகளுக்கு மருத்துவம்

அதேபோல் இந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் தர்மா உள்ளிட்ட நிர்வாகிகள் தனித்தனியாக 3 மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்களில், திண்டுக்கல் மாவட்ட சிறையில் குற்ற செயல்கள் நடப்பதை தடுக்க வேண்டும். சிறைவாசிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை உடனுக்குடன் அளிக்க வேண்டும்.

மேலும், திண்டுக்கல் மொச்ச கொட்ட விநாயகர் கோவிலை சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளன. இதனால் பக்தர்கள் கோவிலை சுற்றி வழிபட முடியவில்லை. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

உதவித்தொகை

ஆத்தூர் தாலுகா பாளையங்கோட்டை ஊராட்சி கூலம்பட்டியை சேர்ந்த முதியவர்கள் உதவித்தொகை கேட்டு மனு கொடுத்தனர். இதுபற்றி அவர்கள் கூறுகையில், 3 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் தொடர்ந்து உதவித்தொகை பெற்று வந்தோம். இந்த நிலையில் திடீரென உதவித்தொகை வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் வயதான காலத்தில் சிரமப்படுகிறோம். எனவே, மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து உதவித்தொகை வழங்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment